0
மக்கள்தொகைப் பெருக்கம், இறைச்சி உணவுப் பழக்கம் அதிகரிப்பு, தொழில் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உலகில் நீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

உலகில் சுமார் 400 பகுதிகளில் உள்ள மக்கள், ''மிகவும் மோசமான தண்ணீர் பிரச்சனை'' சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாஷிங்டனைச் சேர்ந்த உலக நீராதார நிலையம் (WRI) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் குடிபெயர்வார்கள் என்றும், போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

மெக்சிகோ முதல் சிலி வரையில், ஆப்பிரிக்கப் பகுதிகள் முதல் தெற்கு ஐரோப்பாவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வரை, மத்திய தரைக்கடல் பகுதியிலும் ''தண்ணீர் நெருக்கடி'' அளவு மோசமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.

உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதி பேர் அதாவது சுமார் 260 கோடிப் பேர், "அதிகம் தண்ணீர் சிக்கல்" உள்ள நாடுகளில் வாழ்கிறார்கள். இதில் "மிக மோசமான அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக வகைபடுத்தப் பட்டுள்ள 17 நாடுகளில் வாழும் 170 கோடிப் பேரும் அடங்குவர் என்று அந்த உலகளாவிய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் வறண்ட பகுதிகளும் உலகில் அதிக தண்ணீர் பிரச்சனை உள்ளவையாகக் கருதப்படுகின்றன. இந்த நிலையில் ``நீராதாரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலில் நிலவும் குறைபாடுகள் காரணமாக சுகாதாரம் முதல் பொருளாதார வளர்ச்சி வரை கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்'' நாடாக இந்தியா குறிப்பிடப் பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்
பாகிஸ்தான், எரித்ரியா, துர்க்மேனிஸ்தான் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளும், தீவிர நெருக்கடிக்கு ஆளான நாடுகளாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது
உலக நீராதார நிலையத்தின் Aqueduct 3.0 தளத்தில் இருந்து இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு நீராதார மாதிரிகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் நீர் அளவையும், தரைப்பரப்பு மற்றும் நிலத்தடி வளத்தில் இருந்து எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கணக்கிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவு 80 சதவீதத்தைக் கடக்கும்போது 'மிகவும் நெருக்கடியான பகுதியாக' அவை கருதப்பட்டுள்ளன. `அதிக நெருக்கடிக்கு' உள்ளான பகுதிகள் என்பவை 40 - 80 சதவீத அளவுக்கு உள்பட்டு, இதற்கு அடுத்த நிலையில் இருப்பவை.

''இந்தத் தகவல் தொகுப்பின் அடிப்படையில் பணியாற்றுபவன் என்ற வகையில், இந்த எண்களில் இருந்து எதைப் பெறுகிறோம் என்பதில் நான் ஒருசார்பு இல்லாமல் செயல்பட நான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இந்தியாவில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சர்யம் அடைந்தேன்'' என்று இந்த ஆய்வின் கட்டுரையாளர் ரட்கெர் ஹாப்ஸ்ட்டே பிபிசியிடம் கூறினார்.

உலக அளவில் தண்ணீர் பிரச்சனையின் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

மூன்றாண்டுகள் தண்ணீர் பஞ்சத்தால் கிராமமே அசுத்த நீரை குடிக்கும் அவலம்
இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்கள் மிக தீவிரமான தண்ணீர் பிரச்சனை இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டின் சென்னையில் சமீபத்தில் வெள்ளமும், வறட்சியும் சம அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின.

''வரும் ஆண்டுகளில் இந்தியா எந்த அளவுக்கு சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை, சென்னை பெருநகரில் தொடரும் தண்ணீர் பிரச்சனை வெளிக்காட்டியுள்ளது. மோசமான தண்ணீர் மேலாண்மை மற்றும் தொழில் துறைக்கும், மக்கள் தேவைக்கும் அதிகரிக்கும் தண்ணீர் தேவை ஆகியவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது,'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் மெக்சிகோவும் இந்தியாவைப் போல மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 32 மாகாணங்களில், 15 மாகாணங்கள் ''தீவிர தண்ணீர் பிரச்சனை'' இருப்பதாக பட்டியலிடப் பட்டுள்ளது என்று ஹாப்ஸ்ட்டே சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக மெக்சிகோவில் ''எந்த நேரமும் பிரச்சனை வெடிக்கும்'' என்ற சூழல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலி நாட்டில் உள்ள 16 பகுதிகளில், தலைநகர் சான்டியாகோ உள்ளிட்ட 10 பகுதிகள் தீவிர தண்ணீர் பிரச்சனையில் உள்ளன.

சீனா மற்றும் ரஷ்யத் தலைநகரங்களான பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ நகரங்களிலும் அதே நிலைதான். அந்த நாடுகள் தண்ணீர் பிரச்சனை பட்டியலில் இடம் பெறாவிட்டாலும், இந்த நகரங்களில் நிலைமை மோசமாக உள்ளது.

நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலையை அதிகரிக்கும் பருவநிலை மாற்றம்
தெற்கு ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்டநாடுகளில், ஆண்டின் வறட்சியான மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஏற்படும் நெருக்கடி காரணமாக பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இத்தாலியில் 20 மாகாணங்களில், பாதிக்கும் மேற்பட்டவை தீவிர தண்ணீர் பிரச்சனையின் அழுத்தத்தில் உள்ளதாகவும், துருக்கியில் உள்ள 81 மாகாணங்களில் மூன்றில் ஒரு பகுதி (27) இந்த நிலையில் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இருந்தபோதிலும் தென்னாப்பிரிக்காவில் வெஸ்டர்ன் கேப், போட்ஸ்வானாவில் 17 மாவட்டங்கள், நமீபியா மற்றும் அங்கோலாவில் சில பகுதிகள் தீவிர தண்ணீர் பிரச்சனை இருப்பவையாகக் கண்டறியப் பட்டுள்ளன.

தாகம் அதிகரிப்பு
1961க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில், பயன்படுத்தப்படும் தண்ணீர் அல்லது நிலத்தடி நீர் மற்றும் நிலத்தில் உள்ள நீர் நிலைகளில் நன்னீர் பயன்படுத்தப்படும் அளவு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், பயிர்கள் சாகுபடிக்கான தண்ணீர் தேவை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று அந்த உலகளாவிய அறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தப்படும் நீரில் 67 சதவீதம் பாசனத்துக்காக செலவிடப் படுகிறது என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

1961ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் தேவை 2014ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பயன்பாட்டில் 21 சதவீதமாக உள்ளது.

சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்
இதற்கிடையில் வீட்டுப் பயன்பாட்டுக்கு 10 சதவீத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது 1961ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கிற்கும் அதிகமானது.

நீராதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரில் மிகச் சிறிய அளவுதான் கால்நடைகளுக்கு அளிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும் கால்நடைகளின் தீவனங்களை விளைவிக்க பாசனத்துக்கு செலவிடப்படும் தண்ணீரின் அளவு 12 சதவீதமாக உள்ளது என்று 2012ல் நெதர்லாந்தில் உள்ள ட்வென்ட்டே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று ஹாப்ஸ்ட்டே தெரிவித்தார்.

விலங்குகள் மூலம் கிடைக்கும் பொருட்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மாமிச உணவைக் குறைக்கும் வகையிலான உணவுப் பழக்க மாற்றம் உலகின் நீராதாரங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.

''உலக தண்ணீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழி பற்றி கேட்டால், இது ஒரு நல்ல வழி என்று சொல்வேன்,'' என்று பிபிசியிடம் ஹாப்ஸ்ட்டே கூறினார்.

''பயிர்கள் வளர்த்து விலங்குகளுக்குத் தருவதற்கு நாம் நிறைய விவசாய நிலங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே ஆதாரவளங்களை கலோரிகளாக மாற்றி கணக்கிட்டுப் பார்த்தால், இது செம்மையான வழியாக இல்லை.''

2012ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட நெதர்லாந்து அறிக்கையின்படி, விலங்குகள் மூலமான பொருட்களுக்கு செலவிடப்படும் தண்ணீரின் அளவானது, அதே அளவு சத்துள்ள பயிர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தண்ணீர் அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று தெரிகிறது.

பருவநிலை மற்றும் மோதல்
சில பகுதிகளில் தண்ணீர் கிடைக்கும் அளவு கணிக்க முடியாத நிலைமைக்குப் போய்விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதிகரித்து வரும் வெப்பநிலை, மாறிவரும் மழைப் பொழிவு ஆகியவை, ஏற்கெனவே உணவுப் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள, வெப்பம் மிகுந்த வளரும் நாடுகளில் பயிர் விளைச்சலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தற்போதைய போக்குகளின் அடிப்படையில் பார்த்தால், சில வறண்ட மற்றும் பாதியளவு வறண்ட பகுதிகளில் 2030ஆம் ஆண்டுக்குள் 24 மில்லியன் முதல் 700 மில்லியன் வரையிலான மக்கள் குடிபெயர்வார்கள் என்று பாலைவனமாதலைத்தடுப்பதற்கான ஐ.நா. கூட்டமைப்பு கூறியுள்ளது.

தீவிர மற்றும் அதிக தண்ணீர் பிரச்சனை உள்ள பகுதிகள் பலவும் முரண்பாடுகள், மோதல்கள் உள்ள பகுதிகளில் இருப்பதாக உலகளாவிய அறிக்கை கூறியுள்ளது. அடுத்து வரும் மோதல்களுக்கு தண்ணீர் பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேல், லிபியா, ஏமன், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் போன்ற நாடுகள் இதில் அடங்கும்.

குடிபெயர்ந்து வரும் மக்களை பெருமளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஜோர்டான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஏற்கெனவே தண்ணீர் பிரச்சனையை அதிக அளவில் எதிர்கொண்டுள்ளன.

ஆனால், தண்ணீர் பிரச்சனை அழுத்தம் இப்போது இல்லாத நாடுகளும்கூட, வறட்சிகள் காரணமாக பிரச்சனையில் சிக்க நேரிடலாம் என்று அறிக்கை கூறுகிறது. இயல்பைவிட 10 சதவீதம் மழைப் பொழிவு குறையும் பகுதிகளில் இந்த நிலை ஏற்படும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, மால்டோவா மற்றும் உக்ரேன் நாடுகள் குறைந்த மற்றும் நடுத்தர அளவில் தண்ணீர் பிரச்சனை உள்ள நாடுகளாகக் கூறப்பட்டுள்ளன என்றாலும், வறட்சி ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இவை முன்னணியில் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து வங்கதேசம் உள்ளது. அங்கு தண்ணீர் பிரச்சனைக்கான அழுத்தம் குறைந்த அளவே உள்ளதாக இப்போது பட்டியலிடப் பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்த நாடுகளில் உள்ள சிறு விவசாயிகள், ஒப்பீட்டளவில் கலிபோர்னியாவைக் காட்டிலும் குறைந்த அளவில் தான் தண்ணீர் விநியோக மாறுதல்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

தீர்வுக்கு என்ன வழி
உலக தண்ணீர் தேவையை அதிகரிப்பதில் சமூக - பொருளாதாரக் காரணிகள் முன்னணியில் உள்ள பகுதிகளில், நீர் மேலாண்மையால் அவற்றை சரி செய்ய முடியும் என்று உலகளாவிய அறிக்கை காட்டுவதாக ஹாப்ஸ்ட்டே கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு, ``நான்கு வழிகள்'' என்று அரசு குறிப்பிடும் நீடித்த தண்ணீர் விநியோகக் கட்டமைப்பை சிங்கப்பூர் அரசு உருவாக்கியுள்ளது. தண்ணீர் சேகரிப்புக்கு (குறிப்பாக தீவின் சிறிய பகுதியில்) அருமையான நடைமுறை அது; தண்ணீர் இறக்குமதி; NEWater என்று கூறப்படும் அதிக தரம் உள்ள தண்ணீர் மறு உருவாக்கம்; கடல்நீர் சுத்திகரிப்பு என இந்த நடைமுறை உள்ளது.

நவீன நீர் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மையில் உலக அளவில் முன்னணியில் உள்ள மற்றொரு நாடு இஸ்ரேல்.

தண்ணீருக்கான சவாலை எதிர்கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகள், இதுபோன்ற திட்டங்களைப் பின்பற்றி, தங்களுடைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கலாம் என்று ஹாப்ஸ்ட்டே கூறியுள்ளார்.

''தண்ணீர் தேவைக்கான அழுத்தம் என்பது மறைமுகமான அறிகுறிதான். ஆனால் அது உங்களுடைய தலைவிதி அல்ல'' என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

''அந்தந்த நாடுகள் எப்படி கையாளப் போகின்றன என்பதைப் பொருத்து அது மாறும். மோசமான தண்ணீர் பிரச்சனையை சில நாடுகள் வெற்றிகரமாக சமாளித்த உதாரணங்களும் இருக்கின்றன,'' என்று அவர் கூறினார்.

Post a Comment

 
Top