0
இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.

ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும் போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும் போது அவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அப்போது கத்தியால் வெட்டப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கதறிக்கொண்டே அவர் ஓடிய போது, அவரது கதறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர் போகும் வரை தர்ஷிகா எழுப்பிய மரண ஓலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது.

அத்துடன் எட்டு வயது குழந்தை ஒன்று அந்த கோர தாக்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது.

இதற்கிடையில் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி மனைவியை ஓட ஓட வெட்டி, அவர் கீழே விழுந்த பின்னரும், உடல் அடங்கும் வரை குத்திக் கொலை செய்த சசிகரனுக்கும் ஒரு சட்டத்தரணி கிடைத்துள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு மனைவியை அடித்த போது, சசிகரன் சார்பில் ஆஜரான Mitch Engel என்னும் அதே சட்டத்தரணிதான்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சசிகரன் ஒருமுறை நீதிமன்றத்தை தன் கண்களால் சுற்றிப் பார்த்தது தான், அதற்கு பிறகு அவரது கண்கள் தரையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன.

மீண்டும் அவர் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

Post a Comment

 
Top