0
வாஷிங்டன்:மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தடுத்து நிறுத்தும் வகையில், அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானி ஈராக் சென்றிருந்தபோது, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி, அவரை அமெரிக்கா சமீபத்தில் கொன்றது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்கும் வகையில், ஈரானும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கருத்து கூறியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சபையில், ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் அது நிறைவேறும். அதே நேரத்தில், செனட் சபையில், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், அங்கு இந்த தீர்மானம் நிறைவேறுவது கடினமே.

இந்த தீர்மானம் குறித்து, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி கூறியதாவது:

போர் அதிகாரச் சட்டம், 1973ன்படி, முக்கிய ராணுவ நடவடிக்கைகள் எடுக்கும்போது, பார்லி.,யில் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் எதையும் தெரிவிக்கவில்லை.

மேலும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, அதிபர் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ ஆகியோர் கூறியுள்ள கருத்துக்களில் திருப்தி இல்லை.

அதிபரின் பேச்சில் இருந்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த வியூகமும் அரசிடம் இல்லை என்பது தெரிய வருகிறது. மேலும் ஈரானுக்கு எதிரான பதற்றத்தை தணிப்பது குறித்தும், இந்த பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வது குறித்தும், எந்த தகவலும் அளிக்கவில்லை.

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை, அதிபர் எடுப்பதை தடுக்கும் வகையில், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், 2001, செப்.,11 தாக்குதலுக்குப் பிறகு, படைகளை பயன்படுத்துவதற்கான அதிகாரங்களை திரும்பப் பெறுவது குறித்தும் ஆராயப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.


மோதல் தீவிரமடைந்தது

அதிபர் தேர்தலில் மோசடி செய்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்த தீர்மானம், செனட் சபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஆனால், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, புதிய விபரங்கள் கேட்டு, இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பாமல் உள்ளார். இந்நிலையில், குடியரசு கட்சியின் மூத்த எம்.பி.,யான மிட்ச் மெக்கனல், 'ஜனநாயகக் கட்சியினர் வராவிட்டாலும் இந்த தீர்மானம் குறித்த விவாதம் துவங்க வேண்டும்' என, வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நான்சி பெலோசியை சந்தித்த மெக்கனல், 'இத்தீர்மானத்தை செனட் சபையில் கொண்டு வர, பல நிபந்தனைகளை விதிக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியினருடன் எந்த பேரமும் செய்ய மாட்டோம்' என, கூறியுள்ளார்.

Post a Comment

 
Top