0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (03) பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 07, 08ஆம் திகதிகளில் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் இன்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணிவரையும், அதன் பின்னர் 08ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணிவரையுமாக இரண்டு நாட்கள் முழுநாள் ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படும். விவாதம் நடத்தப்பட்டாலும் இது தொடர்பில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படாது.

சபை ஒத்திவைப்பு விவாதத்தின் பின்னர் ஜனவரி 09 ஆம் திகதி காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.மு.ஜயரட்ன தொடர்பில் அனுதாபப் பிரேரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (03) பிற்பகல் 12.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால.டி.சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, கயந்த கருணாதிலக, அஜித்.பி.பெரேரா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

 
Top