0
ஹம்பாந்தோட்ட, மெதமுலன பகுதியில் டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 33.9 மில்லயன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து, நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா உள்ளிட்ட 6 பேறுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (09) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அதில் இருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் அண்மையில் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

அதற்கமைய அவர் குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் ஏனைய 6 குற்றவாளிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது இரு தரப்பு சட்டத்தரணிகளும் வழக்கு தொடர்பான சாட்சி விசாரணைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு மார்ச் மாதம் 05 திகதி வரை அமுலில் உள்ளதால் குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதற்கமைய இந்த வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.

கடந்த அரசாங்க காலத்தில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top