0
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடான ஈரான் இடையே போர் மூளும் அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது. அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில், ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்நடத்தி, அமெரிக்கா சமீபத்தில் கொன்றது. 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் முகாம் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. போரை தவிர்க்கும்படி, இரு நாடுகளுக்கும், பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம், இரு நாடுகளும் தங்களுடைய நிலைப்பாட்டில் சற்று தணிந்து வந்தன.'தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளோம். இதற்கு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா எடுக்காது என்று நம்புகிறோம்' என, ஈரான் ராணுவம் கூறியது.'ஈரான் சற்று பணிந்து வந்துள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதலில், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் யாரும் இறக்கவில்லை; முகாம்களில் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 'பயங்கரவாதி போல் செயல்பட்டதால், சுலைமானை கொன்றோம். ஈரான் மீது அடுத்ததாக நாங்கள் எந்த தாக்குதலையும் நடத்த மாட்டோம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

இரு நாடுகளின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் பிராந்தியத்தில் போர் மூளும் அபாயம் தற்காலிகமாக தணிந்துள்ளது. அதே நேரத்தில், இரு நாடுகளும் அடுத்தது என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்புகளால், அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.

டிரம்ப் பேசிய சில மணி நேரத்தில், ஈராக்கின் பாக்தாத் நோக்கி சில ஏவுகணைகள் பாய்ந்தன. 'அதனால் எந்த பாதிப்பும் இல்லை' என, அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஈரான் மீது, புதிய பொருளாதார தடைகளை, டிரம்ப் அறிவித்துள்ளார். அதனால், உடனடியாக, இரு தரப்புக்கும் இடையே துாதரக பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 

ஐ.நா., பொதுச் செயலர் எச்சரிக்கை

ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடரெஷ் கூறியுள்ளதாவது: பிரச்னை தீவிரமாவதை தடுத்து நிறுத்துங்கள். அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். சர்வதேச ஒத்துழைப்புடன், பேச்சை மீண்டும் துவக்குங்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில், மற்றொரு போரை சந்திக்க இந்த உலகம் தயாராக இல்லை. போர்களால் ஏற்பட்ட மனித உயிர் இழப்புகளை அனைவரும் உணர வேண்டும். சாதாரண மக்களே, இந்தப் போர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மற்றொரு செய்தியில், 'ஐரோப்பிய நாடான உக்ரைனைச் சேர்ந்த விமானம், ஈரானில் விழுந்து நொறுங்கியதில், 176 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது' என, குடரெஷ் கூறியுள்ளார்.

இந்தியா நம்பிக்கை

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது: வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்குள்ள நாடுகளுடன் பேசி வருகிறோம். அந்தப் பிராந்தியத்தில் வெகு விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

 
Top