0
சென்னை: டாப்ஸி நடித்து சமீபத்தில் வெளியான தப்பட் படத்தின் ரீமேக்கை வாங்க போட்டி நிலவுகிறது.

தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வந்த அவர், இந்தி சினிமாவுக்கு சென்றார்.

அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, முல்க், மன்மர்ஸியான், மிஷன் மங்கள் உள்ளிட்ட சில படங்கள் ஹிட்டாகின. இதையடுத்து அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார் டாப்ஸி.

இப்போது ஆனந்த். எல்.ராய் தயாரிக்கும் ஹசின் தில்ருபா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக அவர் கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார்.

அனுபவ் சின்ஹா

டாப்ஸி நடித்து கடந்த மாதம் வெளியான படம், தப்பட். ரா ஒன், முல்க், ஆர்டிகிள் 15 உட்பட சில படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா இதை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் தன்வி ஆஸ்மி, பாவில் குலாதி, சுஷில் தாஹியா, நிதி உத்தம், தியா மிர்ஸா உட்பட பலர் நடித்துள்ளனர். அன்பான மனைவி, ஆதரவான கணவன், மரியாதையான மாமியார் என்று சென்று கொண்டிருக்கிறது, குடும்பம்.

ஒர் அறை

ஒரு பார்ட்டியில், அலுவலக டென்ஷனில் இருக்கும் கணவன் ஏதோ கோபத்தில், எல்லோர் முன்பும் மனைவிக்கு விடுகிற 'ஒர் அறை' மனைவியை எங்கு கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. நல்ல கதைகளைத் தேடி தேடி சென்று நடிக்கும் டாப்ஸி, ஆணாதிக்கத்துக்கு சவால் விடுவது போன்ற இந்தக் கதையையும் தேர்வு செய்ததில் ஆச்சரியமேதும் இல்லை.

நயன்தாரா

இந்தப் படம் பாலிவுட்டில் பல விவாதங்களையும் நல்ல விமர்சனங்களையும் கொடுத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கப் போட்டி நிலவுகிறது. டாப்ஸியின் கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இன்னும் சில நாட்களில் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

Post a Comment

 
Top